Skip to main content

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1 )

இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார். 






இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது. 

இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. தூரத்தில் இருந்து வெள்ளையடிக்கப்பட்ட காவி பூசப்பட்ட  சுவர் போல் தெரிகிறது. நடுவில் தொங்கும் வெள்ளைத்திரை ஒன்றே அதை ஓர் அரங்கம் என்று சொல்ல வைக்கிறது. உச்சியில் பதினைந்து அடி  இருக்கும் , அகலம் பன்னிரண்டு அடி இருக்கலாம். இது தான் கூத்துமாடம். ஆலம்புழா ஆற்றின் ஓரம் இருக்கும் எல்லா பகவதி கோவில்களிலும் இந்த மாடம் இன்றும் இருக்கிறது என்கிறார்கள். மார்ச் முதல் மே வரை வருடந்தோறும் நிகழ்வுகள் நடக்கின்றன. ஒவ்வொரு நிகழ்வும் இருபத்தோரு இரவுகள் நடக்கும்.

பதினோரு மணிக்கு ஆரம்பிக்கும் நிகழ்ச்சிக்கு முன்பே நூற்றுக் கணக்கில் ஒரு ரூபாய் வரிசையில் நின்று பெயர் சொல்லி, நேத்திக்கடன் சொல்லி , நோட்டில் குறிக்கிறார் ஒருவர். பின்னர் இடையில் நிறுத்தி இப்பெயர்களை படித்து பகவதியிடம் பாடி பாவைக்காரர் வேண்டுவது ராமர் ஆசீர்வதிப்பது ஒரு சம்பிரதாயம். 

கூத்துமாடத்தின் பின்புறம் இருளில் அமர்ந்து அன்று ஒரு மாணவனாய் பார்த்ததை , தன்னுள் எழுப்பிய கிளர்ச்சியை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். மார்பு உயர பலாக்கட்டையின் மேல் சிரட்டையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி  21 விளக்குகளை வரிசையாய் வைத்துப் பின்னர் கோவிலில் இருந்து அழைப்பு வந்ததும் புலவர் சென்று, வெளிச்சப்பாடு (பூசகர்) கொடுக்கும் புது வெட்டி அணிந்து , மேல்துண்டுடன் செண்டைகள் முழங்க மாடத்திற்கு திரும்ப வந்து , வெளிச்சப்பாடுடன் மும்முறை மாடத்தை சுற்றி விளக்கை ஏற்றி அன்றைய நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். அதே விளக்கை வைத்து பின்புறத்தில் மாடத்தினுள் இருக்கும் விளக்குகளை ஏற்றுகிறார்கள். இது இங்கு  நிகழ்ந்ததை நினைவு கூறுகிறேன். இதற்குள் மாடத்தில் விநாயகர் , முத்துப் பட்டர், கங்காய பட்டர் என்ற இரு  பட்டர் பாவைகள் மாட்டப்பட்டிருந்தன. விளக்குகள் எரிந்தததும் இவர்களே தெரிகிறார்கள். இவர்கள் இருவரும் கம்பராமாயணத்தை சின்னத் தம்பி என்னும் கேரளத் தோல் பாவைக்கூத்தின் தந்தைக்கு சொல்ல மறுத்ததாகச் சொல்கிறார்கள். இந்த முதல் பாடல்  முடிந்ததும் அவர்கள் திரும்ப வருவதில்லை என்று எழுதுகிறார்.

Blackburn தமிழ் படிக்க, பேசக் கற்றிருக்கிறார். வரிக்கு வரி ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார். கம்பராமாயணம் கற்றிருக்கிறார். பாடல்களை மொழிபெயர்த்திருக்கிறார். பாவைக்கூத்தின் வரலாறாய் ஆராய்ந்திருக்கிறார். இன்றும் கிடைப்பது இவர் சொல்லும் வரலாறே ஆகும். பத்து வருட காலம் வந்தும் போயும் ஆராய்ச்சி செய்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.  ராமச்சந்திரப் புலவரின் அப்பா கிருஷ்ணன் குட்டியை  வீடுதேடிப் போய் பார்த்திருக்கிறார். அவருடைய இந்திரவதைப் படலத்தை வரிக்கு வரி எழுதியிருக்கிறார். ஏன் ராவண வதைக்கு இல்லாமல் இந்திரஜித்க்கு மூன்று இரவு என்று கேட்கிறார். 'ஏனென்றால், இந்திரஜித் மாவீரன். ராவணனின் உயிர். உயிர் போனால் உடல் ஏது ? இந்திரஜித் வீழ்ந்தவுடன் ராமாயணம் முடிந்தது, ராவணன் தோற்றுவிட்டான் ' என்கிறார். இவர் தோல்பாவைக் கூத்தை இந்திய வரைபடத்திலும் , உலக வரைபடத்திலும் மீண்டும் நிறுவியவர். அவர் அவருக்கு முன் இருந்த நாலு தலைமுறையை இவரிடம் சொல்கிறார். சங்கீத நாடக அகாடெமியால் கௌரவிக்கப் பட்டவர். தோல் பாவைக்காரர்கள் ஓலைச்சுவடிகளை வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் விற்பதைக் கண்டு தோல்பாவைக் கூத்தை புத்தகமாய் மலையாளத்தில் கொண்டுவந்திருக்கிறார். தன்னுடைய நான்கு புதல்வர்களில் இருவருக்கு மட்டுமே இக்கலையில் ஆர்வம் உள்ளது, மற்ற இருவர் வேறு தொழில் செய்கின்றனர் என்று சொல்கிறார்.

இதைப் போல பல கலைஞர்களை வீடு தேடி பார்த்திருக்கிறார். அண்ணாமலைப் புலவர் என்பவரை சந்து பொந்துகள் நுழைந்து வீட்டில் இரும்பு மடக்குச் சேரில் அமர்ந்து வாழைப்பழமும், டீயும், வீட்டுப் பலகாரமும் உண்டதை எழுதுகிறார். இவரிடம் இதற்க்கு முன் வந்த ஜெர்மன் ஆராய்ச்சியாளர் இரண்டு ஓலைச் சுவடிகளை ஐநூறு கொடுத்து வாங்கியதை ஐந்து விரல் விரித்து காட்டுகிறார். நேற்று இரவு நடந்த நிகழ்வில் விபீஷணன் ஏன் ராமனிடம் அப்படிச் சொன்னான் என்றால் பதில் சொல்லாமல் ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறார். ஆனால் கூத்து மாடத்தில் இவர் அவரல்ல. 

புலவர் என்றால் என்ன பொருள் என்று ஒருமுறை சிந்திக்க வேண்டும். சங்ககாலப் புலவர்கள் என்கிறோம். கம்பனைப் புலவர் என்கிறோம். காவியம் படைத்த புலவன் என்பவன் அன்று இருந்த அறிவு வெளி அனைத்தையும் கற்று உள்வாங்கி புதிதாய்ப் படைத்தவன். கற்பனை, அழகு, தத்துவம், போர்த்திறன் , அரசியல், ஆன்மிகம் என அதில் சொல்லாத எதுவும் இல்லை. அவனை மகாகவி என்கிறார்கள். நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது எங்கள் தெருவில் புலவர் வீடுகள் என ஒரு சில இருந்தன. பூக்கட்டி விற்பவர்களை புலவர்கள் என்பார்கள். இது அல்ல அது.தோல்பாவைக் கூத்தில் மூத்த நிகழ்த்துபவரை புலவர் என்கிறார்கள். இந்தப் புலவர் என்ற சொல்லுக்கு கம்பனை ஆழமாய்க் கற்றவர் என்று பொருள். கம்பனின் 2000 பாடல்கள் மனனம் செய்து பிரயோகம் செய்கிறார்கள். இது இல்லாமல் பாவை ஆடிக்கொண்டிருக்கும் , பேசிக்கொண்டிருக்கும் போதும் எல்லாம் கம்பனில் இருந்தே இங்கு நிகழ்கிறது. உரையாடல்கள் எல்லாம் கம்பனை ஒட்டியும், தழுவியும், அவர் கற்றறிந்ததை அவர் சொல்லில் சொல்வதுமாய் இருக்கிறது. கம்பனைக் கற்பது என்பது எளிதல்ல. 120126 பாடல்கள் , சில லட்சத்திற்கும் மேலான சொற்கள். பாரதியின் வரிசையில் 'கம்பனைப்போல், வள்ளுவன் போல் , இளங்கோ போல்' என கம்பனையே முதலில் வைக்கிறான். ஆக இந்தப் புலவர் அடைமொழி சாதாரணமில்லை.

Stuart Blackburn மனதில் இருந்த கேள்விகள் இரண்டு. ஏன் இந்தக் கலைக்கு பார்ப்பவர்கள் இல்லை ? எதாவது ஒரு நாட்டார் கலையை தூய முறையில் ஆவணப் படுத்த முடியுமா என்பதே. இதை ஆவணப் படுத்த அவர் பட்ட நடைமுறைச் சிக்கல்கள் ஒரு நீண்ட கோட்டுச் சித்திரமாய் வருகின்றன. அது தானாய் நிகழும் போக்கில் ஆவணப் படுத்த பெரிதும் முயற்சி செய்கிறார். ஒரு வெளிநாட்டவர் பார்க்கும் பொழுது, செய்பவர் வேறுவிதமாக நிகழ்த்துவது இயல்பே. மணிக்கணக்காய் அவர்களுடன் இருந்து சாதாரணமாய் கரைய முயற்சிக்கிறார். சிலர் பெரும்பணம் கொடுத்து தனியாக தோல் கூத்து நிகழ்வுகள் நடத்தி பதிவு செய்தனர் என்கிறார். அது தன்னிச்சையாய் நிகழ்வதில்லை, ஆகையால் சண்டைகள் வந்தாலும் பெரும்பாலும் தான் பணம் கொடுப்பதில்லை. கோவில்களில் நடைபெறும் திட்டமிட்ட விழாக்களில் பின்னிருந்து இவைகளை பதிவு செய்திருக்கிறார்.

கீழே வரும் வரிகள் முத்துப் பட்டரும், கங்காயப் பட்டரும் பேசிக்கொள்ளும் நாடகத்தின் துவக்க வரிகள். Blackburn ஆங்கில வரிகள் தமிழில்.

"இருப்பினும், நமக்குத் இருக்கும் அனைத்து கடவுள்களின் உதவியுடனும், ராம கதையைப் பாடுவது ஒரு அசாதாரண பணியாகும்.
சம்பு ராமாயணத்தின் 100,000 பாடல்கள், மகாநாடகத்தின் 60,000 பாடல்கள், வால்மீகியின் 24,000 பாடல்கள் மற்றும் கம்பனின் 12,026 பாடல்கள் உள்ளன, அவற்றில் சுமார் 1,200 பாடல்களைப் பயன்படுத்துகிறோம். இதைப் பாடி முடிக்க, நமக்கு கூடுதல் மன உறுதி தேவை."


"நிச்சயமாக!"
"ஆனால் நமக்கு நமது ஆசிரியர்கள் மற்றும் நமது ஆதரவாளர்களின் ஆசீர்வாதங்களும் தேவை.

அதற்கு ஒரு பழமொழி உண்டு: 'ஒரு வான்கோழி  மயிலின் நடனத்தைப் ஆட  முயற்சிப்பது போல.'"
"ஆம், இந்தக் கம்பன் பாடல்களைக் கற்றுக்கொள்வது ஒரு முட்டாள் வான்கோழி ஒரு அழகான, இருண்ட மயிலைப் பின்பற்றுவது போன்றது. ஒரு மயில் தன்னை அறியாமலேயே நடனமாடுகிறது - சுழன்று சுழன்று - ஆனால் வான்கோழி அதைப் பார்த்து நடனமாட முயற்சிக்கும்போது, ​​சரி ... அதற்கு கிரீடமும் இல்லை, அழகான விசிறியும் இல்லை. அது ஒரு 'நடனமாக' இருக்கலாம், ஆனால் யாரும் அதை ஒரு மயில் ஆடும்  நடனமாக நினைக்க மாட்டார்கள். கம்பனின் பாடல்களில் மயிலின் அழகு , ஆனால் நாம் ... நாம் படிக்காத வான்கோழிகள்."

கேரள தோல்பாவைக்கூத்தில் கம்பராமாயணம் நுழைந்ததற்கான சான்றுகள் எதுவும் தெளிவாக இல்லை. பாலக்காட்டு  கணவாய் வழியாக வணிகப் பாதைகள் உருவாகி மக்கள் இருபுறமும் புலம் பெயர்ந்த போது நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வழியே கம்பராமாயணம் தமிழகத்திலிருந்து கேரளம் சென்றது, இன்றும் இக்கலை பாலக்காட்டு மாவட்டத்தை ஒட்டியிருக்கும் பகுதிகளிலேயே நிகழ்கிறது. மலைக்கு ஒருபுறம் கொங்கு தமிழ் மன்னர்களும், மறுபுறம் கொச்சி மலபார் அரசர்களும் ஆட்சி செய்த பகுதி. தமிழகப் பக்கம் இருந்த ஆடைத் தொழில் புரிந்த (செட்டியார், முதலியார்) வணிகர்கள் பரதப்புழா வழியே கோழிக்கோடு, கொச்சி  அடைந்து கடல் கடந்து வணிகம் செய்த வணிக வழி. பரதப்புழா இருபகுதியையும் பிரிக்கும் நதி, ஒரு புறம் வளமான நெல் வயல்கள், இன்னொருபுறம் வணிக ஆடைத்தொழில் . ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் இடையே எப்போதும் சண்டை நடந்திருக்கிறது. கடைசியில் ஹைதர் அலி காலம் வரை இருபுற சண்டையில் நடுவில் சிக்கியது இன்றைய பாலக்காடு மாவட்டமே. இவர் மைசூரின் மிளகு போன்ற வாசனைப் பொருள்களுக்கு கடல்வழி செல்ல பாலக்காட்டில் கோட்டையை நிறுவினார். கடைசியில் ஆங்கிலேயர் மைசூரைத் தோற்கடிக்க தாக்கியது இந்தக் கோட்டையே. இதன் பின் இன்றைய மலபார் என்ற பெயர் வந்தது. பாலக்காட்டு பிராமணர்களும் இப்படி வணிகர்களை அவர்களின் கோயில்களை ஒட்டி புலம் பெயர்ந்தவர்களே.

வணிக குலத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் உள்ள இணைப்பை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்றும் கம்பன் கழகம் போன்ற அமைப்புகள் அவர்களாலேயே எடுத்து நடத்தப் படுகிறது. நான் படித்த காரைக்குடியில் கம்பன் விழாக்கள் நடந்ததைக் கண்டிருக்கிறேன். கம்பனும், அவரை ஆதரித்த சடையப்ப வள்ளலும், அவருடைய எதிர் என்று சொல்லப்படும் ஒட்டக்கூத்தனும் எல்லோரும் செட்டியார் மற்றும்  முதலிகளே. கம்பனை அச்சுப் பிரதியில் பதிப்பித்தவர்களும் இவர்களே.கம்பனுக்குள் அன்று இருந்த ராம பக்தி இன்றும் தொய்வில்லாமல் வந்துகொண்டிருக்கிறது.  

இந்தப் புத்தகத்தில் கம்பனைப் பற்றி நிறைய நாட்டார் கதைகள் வருகின்றன. ஏழ்மையில் வாழ்ந்தவர், விளையாட்டுத் தனமாய் இருப்பவர், நிறையத் தூங்குபவர், அரசவையில் முன் நிற்பவர், கம்பத்தின் கீழ் கண்டெடுக்கப் பட்டதால் 'கம்பர்', ஏழை அம்மாவின் வயிற்றில் பிறந்து 'கம்புடன்' மாடு மேய்த்தவர் போன்ற பல செய்திகள். இன்னும் ஒரு கதை கீழே வருவது. குலோத்துங்க சோழனால் ராமாயணத்தை தமிழ் நாவால் பாட கம்பனும் ஒட்டக்கூத்தனும் பணிக்கப்ட்டனர். ஒட்டக்கூத்தர் இரவு பகலாய் எழுதித் தள்ளுகிறார். கம்பர் உண்டு உறங்குகிறார். மன்னர் இருவரையும் அழைத்து எவ்வளவு வந்திருக்கிறது என்று கேட்கிறார். கூத்தர் ராமன் பிறந்தத்திலிருந்து இலங்கைக்கு பாலம் கட்டும் வரை வந்திருப்பதாக சொல்கிறார். கம்பர் தானும் அவ்வளவும் எழுதி அதற்க்கு மேலும்  ஒரு பாடல் எழுதியிருப்பதாக சொல்கிறார். அது என்ன பாடல் என்று மன்னர் கேட்கிறார். 
இது யுத்தகாண்டப் பாடல். வானரப் படை கடலில் பாலம் கட்ட எறிந்த கல் தெறித்த துமி மேலோகம் சென்று தேவர்கள் வாய் பிளந்தனர் என்பது. இதில் துமி என்னும் சொல்லை ஒட்டக்கூத்தர் அப்படி ஒரு சொல்லில்லை என்று மறுக்கிறார். கம்பர் இவர்களை ஊருக்குள் அழைத்துச் சென்று ஒரு தயிர் கடையும் கிழவி பேரனிடம் 'துமி' தெறிக்கும் தள்ளிப் போ என்று சொல்வதைக் காட்டுகிறார். 
"துமிதம் தெறித்து மேலோகம் செல்ல/அமிர்தமென தேவர்கள் வாய் பிளந்தனரே!"  என்பது அப்பாடல்.

கம்பனை ராமச்சந்திரப் புலவர் ஈஸ்வரனில் இருந்து பிறந்தவர் என்று ஒரு காணொளியில் சொல்கிறார். அவர் காளியின் பக்தர். ஆகையினால் இவர்கள் நிகழ்வும் காளி பார்க்க பகவதி கோயில்களில் நடக்கிறது. இதே வார்த்தைகளை நான் நேரில் பார்த்த அன்று புலவர் சொன்னதை நினைவு கூர்கிறேன்.

சம்புகுமாரன் வதம் , வாலி வதை , இன்று போய் நாளை வா, இந்திரஜித் வதை, ராமன் முடிசூடல் என்னும் ஐந்து பகுதிகளில் வெகு விரிவாக எப்படி கம்பராமாயணம் நிகழ் கலையாய் மாறுகிறது என்று ஆராய்ந்திருக்கிறார். வரிக்கு வரி கம்பன் பாடல்களை இந்நாடகத்தின்  சொற்களாகவும் விவரணைகளாகவும் எழுதி ஆராய்ச்சி செய்திருக்கிறார். ராமனை கம்பனின் இறைவன் என்னும் தளத்தில் இருந்து சமநிலை, என்னும் தளத்தில் வைக்கிறார்கள் என்று உதாரணங்கள் காட்டுகிறார். எப்படி அரக்க குணம் என்பதும் ஒரு உணர்ச்சித்தளம் மட்டுமே என்று சூர்ப்பனகை, ராவண வதை மூலம் உதாரணங்கள் சொல்கிறார். பாடல்கள் எப்படி இரு பாத்திரங்களுக்கு மத்தியிலான உரைநடையாக சேதம் இல்லாமல் மாறுகிறன்றன எனக் காட்டுகிறார்.

அ.கா.பெருமாள் இந்தக் கலை 2020-ல் அழியும் என்று சொல்லியிருக்கிறார். கேரளக் கலை நிற்பதன் காரணம் இது கோயிலை ஒட்டிய நிகழ் கலையாய் இருப்பதே என்று சொல்கிறார். Stuart Blackburn காட்டும் சித்திரம் கவலையளிப்பதே. இது 1989-ல் எழுதியிருப்பது. பின்வருவது 1935-ல் தோல் பாவைக்கூத்தை ஆராய்ச்சி செய்தவர் எழுதியது:

"ஒரு பாவையின் வாழ்க்கை ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கையைப் போன்றது என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த பாவைகள் ஓய்ந்து  போகாது, ஏனென்றால் இந்த  நாடகத்தின் பயண நாட்கள் விரைவில் முடிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. இருபது இருக்கைகள் கொண்ட பேருந்துகள் நம் சொந்த நாளின் ஒலி மற்றும் நிழல் நாடகத்தை,  படத்தில்  கொண்டு வரும்போது, ​​பழைய  யுகத்தின் இந்த நிழல்கள் மறைந்துவிடும். பாவைகள் ஆண்டு முழுவதும் பனைப்  பெட்டியில் கிடக்கும் அல்லது ஏதாவது ஒரு அருங்காட்சியகத்தில் கண்ணாடிக்குப் பின்னால் நிழலின்றி நிற்கும்."

இது இவ்வளவு வருடங்கள் தாண்டியும் பிழைத்ததன் காரணம் , கம்பனும், கோவிலிருப்பும், நேத்திக்கடன் போட்டு எதையோ எதிர்பார்த்து இதை இன்றும் நடத்தும்  மக்களும் தான் என்று சொல்கிறார் இறுதி வரியாக. 



இதைப் படித்து எனக்குத் தோன்றியது கம்பராமாயணம் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. இன்று தமிழில் கம்பராமாயணம் படிப்பவர்கள் ஆயிரம் இருந்தால் அதிகம் என்கிறார்கள்.


குறிப்புகள்:

1.தோல்பாவைக்_கூத்து (Tamil Wiki)

2.Inside the Drama House – Rama Stories and Shadow puppets in South India , Stuart Blackburn

3.https://en.wikipedia.org/wiki/K._K._Ramachandra_Pulavar

4.தென்னிந்தியாவில் தோல்பாவைக்கூத்து - பேராசிரியர் அ.கா.பெருமாள் 


Comments

Popular posts from this blog

சைக்கிள் பதிவுகள் 12- Breath, James Nestor , மூச்சைப் பற்றி...

சைக்கிள் பதிவுகள் 12-  Breath, James Nestor , மூச்சைப் பற்றி...  நாம் நினைத்துப் பார்க்க முடியாத சிறிய விஷயங்களையும் வியக்கும் அளவு பெரிதாக்கிச் செய்யும் கலை வெளி நாட்டவர்களுக்கு எப்படியோ உடம்பில் ஊறி இருக்கிறது. என்றோ ஒரு நாள் வியந்து, பின்னர் அதைப்போலத்தான் இது என்று அடுக்கி , அதற்குப் பெயர் கண்டு பிடித்து  மிகச்சாதாரணமாக  கடந்து செல்லும் விஷயம்தான் இதுவும். உதாரணமாக இப்போது இங்கு பிராணாயாமம் என்று ஒரு வார்த்தை எழுதினால், அடுத்த நொடி  நீங்களும் இதை ஒரு முழு நீள ஸ்குரோல் செய்து கீழே முட்டியதும் மூடி வைத்துவிட்டுப் போகலாம். ஏனென்றால் அதிலிருக்கும் வியப்பைப்  பிதுக்கி எப்போதோ வெளியில் எடுத்தாயிற்று.  சில வருடங்களுக்கு முன் முதலில் ஒருவர் மூச்சை வைத்து பிழைப்பை நடத்துகிறார் என்பது எனக்கு பெரிய ஆச்சரியமாய் இருந்தது. இந்தப் புத்தகத்தை வாசித்ததும் மீண்டும் அந்தக் கம்பெனி இருக்கிறதா என்று தேடினேன். அமோகமாய் இருக்கிறது. அவரும் ஒரு புத்தகம் எழுதிவிட்டார். அண்ட்ராய்டு , ஐபோன் ஆப் இருக்கிறது. பேட்ரிக் மெக்கேன் , Oxygen Advantage என்பது அவருடைய நிறுவனத்தின் பெயர்...

மனக்குகை ஓவியம்

மனக்குகை ஓவியம்  சென்ற முறை இந்திராநகர் Atta Galatta வில் நடந்த கதை வாசிப்புக் கூடுகையைப் பற்றி முக்கால் எழுதியது இருக்கிறது. கூடுகை இரண்டு குறுநாவல்கள் பற்றியது 1) கிளி சொன்ன கதை 2) தீ அறியும்.  கூடுகைக்குப் பின், எவ்வளவு மனங்கள் உண்டோ அவ்வளவு பார்வைகள் உண்டு என்று மட்டுமே சொல்ல முடியும். எனக்கும் வாசிப்பில் சில திறப்புகள் கிடைத்தன. கேட்டல் இனிது. அதற்குள் நாளை அடுத்த கூடுகை வந்துவிட்டது.  Atta Galatta இடத்தைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். இந்த புத்தகக் கடையில் ஒரு மேஜையை கலந்துரையாட நமக்கென்று ஒதுக்குகிறார்கள். புத்தகத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். உள்ளேயே காபி டீயெல்லாம் கிடைக்கிறது. எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கிறார்கள். உட்கார்ந்து பேச மிக அழகான இடம். வசதியான இருக்கைகள், சிலபேர் லேப்டாப் , டேப்லட் போன்றவைகளை மேஜையில் வைத்துப் பேசினார்கள். இந்த முறை குகை என்ற குறுநாவல். https://www.jeyamohan.in/115739/ https://www.jeyamohan.in/115744/ https://www.jeyamohan.in/115752/ https://www.jeyamohan.in/115763/ இந்தக் கதை கடந்...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...