தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை
==============================
சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள் குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப் படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன்.





ராமச்சந்திர புலவர் போன்ற மாபெரும் கலைஞர்களுக்கு இருக்கும் ஒரே நடைமுறை சிக்கல் ஆங்கிலம் மட்டுமே. கடைத் தெருவில் யானை நடப்பது போல் ஆகி விடுகிறது. நாம் யானை காட்டில் இருப்பது என்பதையே மறந்து விட்டிருக்கிறோம். இந்தக் குழுவில் அவர், மனைவி, மகன், பேரன் எல்லோரும் இருந்தார்கள். மொத்த நிகழ்ச்சியும் ஆங்கிலத்தில் நடந்தது. அந்த ஓரிரு மணி அவர் யானை போல் கடைத் தெருவில் ஒரு நடை போய் வந்திருக்கிறார் என்றே இன்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் நம் போன்ற உயிர்களுக்கு யானை பார்க்க முடியாமலே போய் விடும் , அல்லவா?
ஆனால் காட்டு யானையும் , வழிந்தோடும் நீரும் அதன் பாதையை அது அதுவாய் தேடிக்கொள்கின்றன. அவர் நிகழ்வு ஆரம்பித்த ஒரு சில நிமிடத்திற்குள் 'உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் , அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே' என்று உடைந்து முதலில் கம்பர் வெளியே வந்தார். பின்னர் அடுத்த இரு மணியில் கம்பனும் , பகவதியும் , பத்ரகாளியும் பல முறை அன்று அவர் சொல்லில் வெளி வந்தனர்.
முதலில் அவர் ஆங்கிலத்தில் தோல் பாவைக்கூத்து பற்றி ஓரிரு வரிகள் பேசினார். இன்றைய சினிமாவுக்கு வழிவகுத்த நிகழ்த்து கலை இதுவே என்று சொன்னார். பின்னர் அவருடைய புதல்வர் ராகுல் puppetry பற்றி சில நிமிடங்கள் பேசினார். அவர்கள் 21 தலைமுறையாக தொய்வில்லாமால் தோல்பாவை நிகழ்வைச் செய்வதாகச் சொன்னார்.
விண்மீன்கள் போன்ற வெண் பற்களைக் கொண்ட அன்றைய இரவென்ற இரணியனை, சிவந்த கோபத்தில் ஆயிரம் கைகளின் கிரணத்தோடு , தங்கத் தூண் என்னும் மலை பிளந்து மானுட மடங்கல் (நர சிங்கம்) என காலைக் கதிரவன் தோன்றினான். இவை கம்பன் வரிகள். எல்லா விளக்குகளும் அணைக்கப் பட்டு உள்ளே திரையின் பின்னர் விளக்குகள் ஏற்றிப் பாவைகள் ஒளி பெற்றபின் கூத்துமாடம் காலைப் பொன்னொளியில் அப்படித்தான் துலங்கியது. நடுவில் பிள்ளையாரும் , வலப்புறத்தில் ராமனின் பாவையும் , இடத்தில் சீதையும் , இருவரின் அருகிலோர் விளக்குப் பாவையுமாய். பின்புற வெள்ளைத் திரையில் ஒரு கம்பியில் எண்ணெய் விளக்குகள் ஒளிர்வது தெரிந்தது.
அடுத்த ஒரு மணிக்கு மான்கள் துள்ளின, பாம்புகள் சீறின, அம்புகள் வெளிப்பட்டு தலை கொய்தன, இலங்கை பற்றி எறிந்தது, இராவணன் பத்து தலை வீழ்ந்தது, பெண்களும், ஆண்களும் ஆடினார்கள், ராமன் பட்டாபிஷேகமும் நடந்தது.
இருளில் இருந்து ஓளியைப் பார்ப்பது ஒரு இனிய அனுபவம். அந்தக் கால கிராமத்து வீடுகள் மிக நீளமாய் இருக்கும். எங்கள் வீடு ஐம்பது மீட்டர் நீளமிருக்கும். மேற்கூரை மிக உயரமாய் வைத்து மேலே உத்திரத்தில் தேக்கு மரக் கட்டைகளை குறுக்கே பாய்ச்சியிருப்பார்கள், கீழே தாங்கும் தூண்கள் அங்கங்கே சுவர் ஓரமாயும், நடுவேயும் நிற்கும். சூரிய ஒளிக்கு ஒரு செங்கல் அகல திறப்பு அங்கங்கே இருக்கும். அதன் மேலே கண்ணாடி பதித்துப் பூசியிருப்பார்கள். பகல் நேரத்தில் ஒளியும் , மழை நேரத்தில் ஈரமும் கசியும் இடமும் அதுவே. எப்போதும் ஒளிபுகா இடங்கள் உண்டு. சமலயலறையில் ஒரு இடம், தாழ்வாரத்தில் ஓரிடம் என. பகலில் ஒரு நேரம் அங்கும் ஒளி புகும். சாய்ந்த சூரிய கிரணங்கள் சன்னல் வலையில் புகுந்து , கம்பியில் பட்டு வேறு வேறு ஒளிக் கைகளாய் விழுவதை இருட்டில் இருந்து பார்ப்பது ஒரு பரவச அனுபவம். அதில் மெல்லிய ஒளித்தூசுகள் காற்றில் அலைவது போல் நடனமிட்டு மறைந்தும் தோன்றுவதுமாய் இருப்பதைப் பார்ப்பது ஓர் விளையாட்டு.
அதுவே போல், அந்தக் காலங்களில் நெகடிவ் பிலிம்களை வைத்து, உச்சிவெயிலில் ஒரு கண்ணாடியில் சூரிய ஒளியை பிரதிபலித்து, வீட்டிற்குள் அதை வேண்டிய அளவு அடக்கி , உள்வாங்கி , ஒரு வெள்ளை வேட்டியில் பட வைத்து, லென்ஸின் நடுவில் பிலிமைக் காட்டினால் திரையில் பெரிதாய் பிம்பம் விழும்.இதை இருட்டில் ஒரு கூடத்தில் அமர்ந்து பார்ப்பார்கள். ஒளிச்சுருள்கள் படம் காட்டும் அளவுக்குச் சிலர் கைவசம் வைத்திருந்தனர். பைனாகுலர் போல கண்ணில் ஓட்டும் ஒரு பிலிம் சுருள் பட ஓட்டி படிக்கும் வயதில் பார்த்திருக்கிறேன்.
சிறு வயதில் ஒரு முறை தோல் பாவைக்கூத்து பார்த்த நினைவு இருக்கிறது. ஆனால் அவ்வளவு தெளிவில் என்ன நடந்தது என்று நினைவில்லை. பல நாள்கள் பள்ளியின் முன்னிருக்கும் மைதானத்தில் முகாமிட்டிருப்பார்கள். இரவில் நிகழ்வு நடக்கும். ராமாயணம் என்று நினைவிருக்கிறது.
மகாபாரதத்தில் தோல்பாவைக் கூத்து பற்றிய குறிப்புள்ளது. பருத்தி நூலால் இயங்கும் பாவை பற்றிய குறிப்பு உத்யோக பர்வத்தில் வருகிரது. கண்ணனில் ஆரம்பித்து இன்று இன்முகம் காட்டி விவகாரம் பண்ணும் யாரையும் குறிக்கப் பயன்படுத்தும் சொல் சூத்திரதாரி. இது தோல்பாவைச் சொல். நூலை வைத்து பாவை ஆட்டுபவரின் பெயர். பாவைகளை இணைக்கும் கயிறுகளை இயக்குவது சூத்திரம். சீனாவில் பிறந்து , ஜாவா , எகிப்து , துருக்கி வழியே பரவி இந்தியா வந்தது என்று சொல்கிறார்கள். இந்தியாவில் மஹாராஷ்டிராவில் வேருன்றிப் பின் தஞ்சாவூர் சாம்போஜி மன்னர்கள் வழியாக தமிழகத்தில் நுழைந்தது. இது பதினேழாம் நூற்றாண்டு. பின்னர் பாலக்காட்டு வணிகப்பாதையின் வழியே கேரளத்தில் தமிழர் குடிபெயர்ப்பின் வழியே உள்ளே சென்றது. மஹாராஷ்டிர பாதையில் இந்தக் கலையை தமிழகம் கொணர்ந்த மக்களை மண்டிகர் என்று அ .கா . பெருமாள் கூறுகிறார். இவர்களே இன்றும் தமிழகத்தில் எஞ்சியிருக்கும் தோல் பாவைக் கலையை நூலில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மதுரையிலும் , கன்யாகுமரி மாவட்டத்திலும் இன்னும் சிலரே இருக்கிறார்கள். அ .கா . பெருமாள் எழுதியிருக்கும் சித்திரம் ஒரு பதிவு போல் இருந்தாலும் உள்ளோடும் இந்த மக்களின் , கலையின் நிலை வருத்தம் அளிப்பது. அவர்களுக்கு சங்கம் அமைத்துக் கொடுத்து, இட ஒதுக்கீடு முன்னின்று வாங்கிக் கொடுத்திருக்கிறார். கலெக்டரை, தாசில்தார்களைப் பார்த்திருக்கிறார். பல்கலைக்கழக திட்டங்கள் தீட்டி இதை ஆவணப் படுத்தியிருக்கிறார்.
சங்கப்பாடல்களில் பாவை என்னும் சொல் நிறைய இடங்களில் காணக் கிடைக்கிறது. 'வலியவள் ஆட்டுகின்ற பாவை' 'பொறியழி பாவை '- வேலைப்பாடு உள்ள எந்திரப்பாவை " போல.
'சீலமின்றி நோன்பின்றி
செறிவேயின்றி அறிவின்றி
தோலின் பாவை கூத்தாட்டாய்
சுழன்று விழுந்து கிடப்போனை ' என்று மாணிக்க வாசகர் தன்னைத்தானே கூறிக்கொள்கிறார். ஆனால் மேற்க்கூறிய சான்றுகளை வைத்து சங்க இலக்கியத்தில் வரும் பாவை என்னும் சொல் பொம்மலாட்டம் குறித்ததே என்று ஊகிக்கிறார்கள்.
இதே போல் ஆந்திரத்திலும் , கர்நாடகாவிலும் தோல்பாவைக் கலை இருந்த சான்றுகள் உள்ளன. ஆந்திராவில் பாவைக்கூத்து ராமநவமியில் ஆரம்பிக்கும் வழக்கம் உள்ளது. இதற்க்கு 'ஆட்ட கோலாலு' என்று பெயர். கர்நாடகத்தில் இதற்கு 'தொகலு கொம்ப ' என்று பெயர். தொகலு என்றால் தோல் , கொம்ப ஆட்ட என்பது பாவைகளின் ஆட்டம் என்றும் பொருள் வரும்.
எல்லாப் பகுதியிலும் ராமாயணமும், மகாபாரதமும், புராணங்களும் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன.
தோல்பாவைக் கூத்து ஒளியின் கலை. வேறு எந்த நிகழ் கலையிலும் கலைஞன் நேரடியாக பார்வையாளரின் முன் தெரிகிறான். அவனுக்கும் , பார்வையாளனுக்கும் நடுவில் ஒரு நேரடித் தொடர்பு உருவாகிறது. ஆனால் இக்கலையில் இருவரும் இணைவது ஒளியின் வழியாகவே. திரையின் பின்னால் இருப்பவர்கள் தன்னிலே கரைந்து மட்டுமே அந்த உணர்வை வெளிப்படுத்த முடியும். ஒளியின் மூலமும், உரையாடல் மூலமுமே உணர்வை வெளிப்படுத்த முடியும். பாவைகளில் ஒளி ஊடுருவ மெல்லிய துளைகள் இடப்படுகின்றன. பாவைகள் முதலில் மானின் தோலிலும் , பின்னர் ஆட்டின் தோலிலும் செய்யப் பட்டிருக்கின்றன. ஆட்டின் மூன்று தோல்களில் உட்புறம் இருக்கும் மெல்லிய நடுத் தோலை எடுத்து, நீரில் ஊற வைத்து , ஆணி அடித்து சில தினங்கள் காய வைத்தால் பேப்பர் போல் ஆகிவிடும்.
இயற்கை வண்ணங்களே பயன் படுத்தியிருக்கின்றனர். எண்ணெயிலும், வேப்ப மர பிசினில் குழைத்த அடுப்புக்கரி, அவுரிப் பச்சை போன்ற தாவர வண்ணங்கள் வழியே. முக்கியமாய் வண்ணங்கள் ஒளி ஊடுருவும் தன்மை உடையதாய் இருக்க வேண்டும். துளைகளை வைத்து ஆபரணங்கள் செய்கிறார்கள்.பொதுவாக ராமன் நீலம் , பச்சை, பரதன் பச்சை, சீதை , லக்குவனன், தயரதன் சிவப்பு வண்ணத்திலும் இருப்பார்கள். முக்கிய பாத்திரங்களுக்கு மட்டும் 20க்கும் மேல் படங்கள் இருந்திருக்கின்றன. 50 படங்கள் வரைய ஐந்து வருடம் வரை ஆகலாம் என்கின்றனர். காலெண்டர்கள் , கோவில் சிற்பங்கள் வரைவதற்க்கு உதாரணமாய் இருந்திருக்கின்றன. 1960களில் வரையப்பட்ட படங்களில் எம்ஜிஆர் , சரோஜாதேவி சாயல் இருப்பதாக பெருமாள் கூறுகிறார். ஏனென்றால் சுவரொட்டிகளைப் பார்த்து படம் வரைந்திருக்கிறார்கள்.
கேரளத்து தோல்பாவைக் கூத்து முற்றிலும் கம்பராமாயணம் சார்ந்தது. அந்த மரபில் வந்தவரே ராமச்சந்திரப் புலவர். இவருடைய தந்தையைப் பற்றி Stuart Blackburn தன்னுடைய Inside the drama house நூலில் ஒரு முழு அத்தியாயம் எழுதியிருக்கிறார். இது ஒரு புனைகதை போல் இருக்கும் புத்தகம். இதைப் பற்றி அடுத்த பகுதியில் எழுதி முடிக்கிறேன்.
'கூரையின் கீழ்
ஒளிந்திருக்கின்றன
எவ்வளவோ
நிழல்கள் '
-கலாப்ரியா
Comments
Post a Comment