மனிதன் நடக்க வேண்டியது அவசியமா ? நம் எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி. காலால் நடந்து என்ன ஆகி விடப் போகிறது? தினமும் பத்தாயிரம் அடிகள் நடக்க வேண்டும் என்கிறார்கள். சிலர் ஏழாயிரம் என்கிறார்கள். இது அவசியமா? எதாவது உடல் வேலை செய்வது முக்கியமா? ஆரோக்கியத்திற்கும் , கையையும் காலையையும் அசைப்பது சம்பந்தம் உண்டா ? அதிலும் தினமும் நடப்பது அவசியமா? அண்மையில் ஹுபெர்மன் வலையொலி மூலம் மனிதனின் நிணநீர் மண்டலம் குறித்து அறிய நேர்ந்தது. இது எனக்கு கண்திறப்பாய் அமைந்தது. எனவே அதைப்பற்றிய சிறு குறிப்பு. நான் என்னுடைய பாட்டியின் ஊருக்கு முழுப்பரிட்சை விடுமுறையில் செல்லும் போது, காலை ஆறரை மணிக்கு வெளியே தெரு பார்த்து போடப் பட்டிருக்கும் திண்ணையில் முதுகு சாய்த்து உட்கார்ந்து பேப்பர் படித்தபடி , தெருவை வேடிக்கை பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம். ஊர் கண் விழிக்கும் அந்த வேளையில், மணிகள் லேசாக குலுங்க, கன்றுகள் முன்னாலும் பின்னாலும் ஓட , அவ்வப்போது கம்பு மாட்டின் முதுகில் உறையும் ஓசையுடன் , எருமையும் , பசுவும், காளைகளும் தெருவில் சாணியும், மூத்திரமுமாய் ஒரு பக்கம் ஊரணி பார்த்துச் செல்லும். மறு...