ஒரு செடியின் கல்லறை -------------------------- நான் வேலைக்குச் செல்லும் போது தினமும் பார்க்கும் காட்சி , அடுத்த வீட்டு ஓனரின் அப்பா ஒரு ஹோஸ் பைப்பை கையில் வைத்து தெருவெல்லாம் தண்ணீர் ஒட வைப்பார். அது போல் எல்லா வீடுகளிலும் ஏதோ ஒரு அம்மாவோ, பாட்டியோ செடிக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார் . இங்கு எல்லார் வீட்டு வாசலிலும் பூச்செடிகள் இருக்கின்றன. விரித்த பசும்புல் பாயில் இடையில் செடிகள் அமர்ந்திருக்கும். சில நின்றபடி இருக்கும். சில செடிகள் தவழ்ந்தபடி இருக்கும் . சில நீராய் வழி தேடி தரையில் ஓடியபடி இருக்கும். சில கொடியாய் , மேகமாய் , பறவையாய் வானில் வழி கேட்டு நிற்கும். இதற்கெல்லாம் இடையில் சிலையாய் ஒரு மரம். ஆனால் எல்லாவற்றிலும் தலையில் பூக்கள். ரோஜாவும், கேந்தியும் , செம்பருத்தியும், குல்மோகர், குறிப்பாய் ஆப்ரிக்கன் துலிப். இந்த ஊரின் செங்காந்தள். மரமே கனன்று எரிவது போல் இருக்கும். அப்புறம் அந்த யானைக் காதுகள் போல் இலைகளை மெலிதாய் ஆட்டியபடி இருக்கும் அந்தச் செடி. கட்டிப் போட்ட நாயாய் , கைப்பிள்ளையாய் சிறிய, பெரிய தொட்டிகளில் வளரும் செடிகள். தலையிலும் இடுப்பிலும் ஏறி ...