1. கடுமையான டிராபிக் ஜாமில் ====================== கடுமையான டிராபிக் ஜாமில் என்ன செய்யலாம் நிறைய தண்ணீர் நிறைத்துவைத்து இடையிடை அருந்தலாம் யாருக்காவது போனை முடுக்கி வலியப் பேசலாம் வண்டியை ஓரமாய் நிறுத்தி ஆசுவாசமாய் சிறுநீர் கழிக்கலாம் 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க' கேட்கலாம் இல்லை விக்ரமாதித்யனின் ஆழித்தேர் கவிதை படிக்கலாம் வீடு சேர்ந்ததும் வெந்நீரில் குளித்து எல்லாம் மறக்கலாம் 2. சமரசம் உலாவும் இடம் =================== சாம்பல் வெள்ளை சிவிகையில் (பென்ஸ்) செல்பவர்கள் நிரந்தர சல்லியர்கள் ரதம் ஓட்ட செல்பவர்கள் தேரையும் சல்லியர்களையம் சிறிது இரவல் வாங்கி செல்பவர்கள் குளிரூட்டப்பட்ட பெரிய வண்டியில் வெண்குடை சாமரங்களுடன் பலர் கையில் தட்டுத் தாம்பாளங்கள் மங்கலங்கள் வேதகோசமும் சாமகீதமும் விடாமல் ஒலிக்க தேர் யானை குதிரை காலாட்படைகள் எல்லாமும் விக்கித்து நிற்கின்றன ஒரே ஒரு அடி நகர்வும் எழுப்பும் ஒலியால் அடுத்தவர் உரைத்...