தமிழில் கீதையைப் பாடலாக மொழி பெயர்த்தவர் ஆயன் பட்டனார் என்பவர் கிபி 12-ம் நூற்றாண்டில் என்கிறார்கள். இது இப்போது கூகிளிலும் சிக்கவில்லை. ஒரு விக்கிபீடியா பக்கம் இவர் பெயரில் இருக்கிறது அவ்வளவே. அடுத்த தமிழ் மொழிபெயர்ப்புக்கு பாரதியார் பிறந்தாக வேண்டும். இவர் பாண்டிச்சேரியில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தலைமறைவாய் இருந்தபொழுது, அரவிந்தர் போன்றோரின் உந்துதலால் எழுதியிருக்க வேண்டும். 1912-ல் எழுதி முடித்திருக்கிறார். இரண்டுக்கும் இடையில் 700 வருடங்கள் இருக்கின்றன. 1885-ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியாவின் கவர்னர் ஜெனெரலாக இருந்தபோது , சார்லஸ் வில்கின்ஸ் என்பவரை கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பணிக்கிறார். இதுவே முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு. இதையே காந்தி லண்டனில் பாரிஸ்டர் பயிலும் போது படிக்க நேர்கிறது. இதுவே அவருக்கு கீதையின் நேரடி அறிமுகம், 1890 வாக்கில் , இது ஆங்கிலம் வழியே என்பதை கவனிக்க வேண்டும். (இந்த கீதை என்கவுண்டர் நடக்கும் போது காந்திக்கு 20 வயது, பாரதிக்கு 30, மொழி பெயர்த்து முடித்து விட்டார்). இதன் பின்னர் பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பிக்கின்றன. இந்த ஆங்கிலப் பதிப்புக...