2063 என்று சொல்லிப்பார்த்தால் பெரிதாக ஏதும் தோன்றவில்லை. இந்த நம்பரை நாட்கள் என்று எண்ணி 365 -ல் வகுத்து 5.8 வருடங்கள் என்றால் நீளம் தெரிகிறது. 2063-ஐ ஐந்தால் பெருக்கினால் இன்றிலிருந்து வாழ்நாள் கடைசிக்கு வந்து விடும். இப்போது மீண்டும் சிறிதாகத் தோன்றுகிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் ஒரு விழாப் பந்தலில், என்னையும் சேர்த்து மூன்று நண்பர்களுடன் உட்கார்ந்து, நாலாவது நண்பரின் விழாவில் என்ன செய்வது என்பது என்று தெரியாமல், சாப்பாடு நேரம் எப்ப வரும் என்று எதிர்பார்த்து சேரைத் தேய்த்து, கால் மாற்றி மாற்றி உட்கார்ந்து எல்லாம் செய்து, மேற்கொண்டு செய்வதறியாமல் இருக்கும் போது தான் , அருகிலிருந்த நண்பரின் கையிலிருந்த ஆப்பிள் வாட்சை முதலில் அருகில் கண்டேன். (அவர் அப்போது தான் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி பண்ணி கையில் கட்டி இருந்தார். அதையே இன்னும் கட்டியிருக்கிறார்...இங்கு பொருத்தம் இது தான் : அவர் பெயர் மணி , ஆனால் அவர் கை மணி மாறாதது ) . அது இதயத் துடிப்பைக் காட்டும் என்று சொன்னார். வாங்கி கையில் கட்டிப் பார்த்தேன். அறிவியலின்படி எதையும் நீங்கள் அளக்க ஆரம்ப...