முதல் மழை எனக்கு எட்டு ஒன்பது வயது இருந்தபோது உள்ளூர் கிராம பஞ்சாயத்து பள்ளியில் இருந்து நிறுத்தி வெளியூர் பள்ளியில் சேர்த்தார்கள். இரண்டிலுருந்து மூன்றாவது வகுப்பு செல்ல வேண்டும். வீட்டில் எதிர்வீட்டில் 1 வது வகுப்பு டீச்சர் இருந்தார். ஒன்பது மணிக்கு வேலைக்குச் செல்லும் முன், கிழக்கே பார்த்து நடுத்த தெருவில் நின்று ராஜகோபாலப் பெருமாளை 'பெருமாளே ' என்று சிரம் உயர்த்திக் கும்பிட்டு, என்னையும் ஒரு குரல் கொடுத்து பள்ளிக்கு கூட்டிச் செல்வார். தினமும் கை பிடித்து கூட்டிச் செல்வார் என்று எழுதலாம், ஆனால் உண்மையில் மிக வேகமாய் நடப்பார் , ஓடித்தான் பின்னால் சென்றாக வேண்டும். மிக நீள ஜடை , ஆனால் வெள்ளை. பிறந்த நாள் அன்று சென்று காலில் விழுந்து வணங்கினால் , ஒரு ஸ்பூன் சக்கரையும் , ஒரு ரூபாயும் கொடுப்பார் . நிற்க, முழுத் தெருவையும் கடந்து , அதாவது, மொத்த வீடுகள் 66, எங்கள் வீட்டின் எண் 2/63, பின்னோக்கி எதிர் எதிராய் 60 வது வீடுகள் , உள்ளே வெளியே பார்த்தபடி நடந்தால் , நூலகம் தாண்டி , ரோட்டின் மேலேறினால் பள்ளிக்கூடம் வரும். ஒரே சத்தம் தான் நினைவில் இருக்கிறது. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை,...