சருகின் எடை இப்போதெல்லாம் காலையில் எழுந்து கீழே கால் வைத்து, முதலடி தரையில் படும்போது ஒரு வெம்மை வர ஆரம்பித்திருக்கிறது. இரண்டொரு நிமிடங்களில் நெற்றியில் பூத்து விடுகிறது. கதவைத் திறந்து சிறு உப்பரிகையில் நின்றால் இப்போதும் பிரிட்ஜை திறந்து நிற்பது போல், இனிய சொல் போல இன்னும் மிதமாய் குளிர். ‘அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய், அமுது உண்டு போதி’ என்று வரும் கதிரவனை எதிர்பார்த்து காத்திருக்கும். இப்போதெல்லாம் அவர் சரியாய் வந்து விடுவார். மேகம் ஊர்ந்து, மேல் ஏறிச் செல்லும் விண்ணவன் இல்லை. தனியாய் வருகிறார். உலகைக் காக்க அவரன்றி யார் உளார் ? இதைப் புரியவைக்க வேறு சரியான நேரம்தான் உண்டா ? // ‘வானே புக்கான் அரும் புதல்வன்’ மக்கள் அகன்றார்; வரும் அளவும் யானே காப்பென், இவ் உலகை’ தசரதன் இறந்துபட்டவுடன், சூரியன் வேறு எவர் வேண்டும், என்றும் நான் இருக்கிறேன் மக்களைக் காக்க, என்று தேரில் ஏறித் தோன்றியதாக கம்பர் எழுதுகிறார். மார்ச் மாத காலை பொழுது வேறு தான். நாய்கள் காலையிலே நிழல் தேடிக் கண்டு இன்னும் கொஞ்சம் உறங்குகின்றன. ஒரு இலையுமன்றி ...