வெள்ளிவீழ்த் தாரைகள் கடந்த சில நாட்களாக சொல்லி வைத்தாற்போல் மாலை ஐந்தரை ஆறு மணிக்கு மழை பெய்கிறது. ஏரியைச் சுற்றி நடைப்பயிற்சி ஆரம்பிக்கும் போது எல்லாம் சரியாய் இருப்பது போல் இருக்கிறது. பாதி சுற்றில் இருக்கும் பாலம் அருகில் நின்று பார்த்தால், மழைக்கடவுளுக்கு வயிறு கலங்குவது போல் வடமேற்கு மூலையில் கரு மேகங்கள் திரள ஆரம்பிக்கும் - வீறு அணிந்தவன் மேனி நிற மேகங்கள். தென் கிழக்கு மூலையில் இன்னும் வெள்ளை மேகங்கள் இருக்கும் - நீறு அணிந்த கடவுள் நிறத்த வான். இன்னும் கால்வாசி முன்னகரும் முன், ஒரு சில கனமான துளிகள் உடம்பில் தெறித்து விழும். கண்டிப்பாக புது வழுக்கையில் ஒரு சில துளிகள் படும். பட்டதும் காதில் ஒரு தகர ஒலி அதிர்வுகள் ஏற்பட்டு, மூக்கினுள் எதோ இறங்குவது போல் இருக்கும். நடு வழியில் இருக்கும் முதியவர்கள் 'அரே , பாப்ரே...' என்று முன்னால் போவதா , பின் வாங்குவதா என்று பேசிக்கொள்வார்கள். கொஞ்சம் மழை கியரை மாற்றியபின் அங்கிருக்கும் ஒரு பத்து இருபது பேர் ஓட ஆரம்பிப்பார்கள். ஒரு நாய்க்கூட்டம் நிதானமாய் ஓட ஆரம்பிக்கும். கழுத்தில் கட்டப்பட்ட நாய்கள் சிலரை பிடித...