சிறியன செய்தல் எப்போதும் சுற்றி இருப்பவர்கள் செய்யும் வேலையை கவனிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. காரணம், உடல் உழைப்பு மனதளவில் எளிதாய் தோன்ற ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டன. நான் வேலை பார்த்த இடங்கள் எல்லாம் தொழில்நுட்ப வேலைகள். வேலை பார்க்கும் நால்வரில் அல்லது ஐவரில் ஒருவர் வேலையை மேற்பார்வை செய்பவர். கீழே இருப்பவர்கள் வேலையை விளக்குவது, அவர்கள் செய்வதை பிறருக்கு விளக்குவது, தம் வேலை ஊடுபாவும் இடங்களை சரியாகத் தெரிந்து, அறுபடாமல் அவற்றை இணைப்பது, முடிவில்லாத திட்டமிடல்கள், ஆயத்தங்கள் . ஆக வேலையைப் பற்றி பேசியே பெரும்பாலும் நேரம் கழிகிறது. ஒரு தளத்தில் எல்லாமே ஒன்று போல் தெரிய ஆரம்பிக்கிறது. இதை எழுதும் முன் , ஒரு வேலையைப் பற்றி , இரு குறுஞ்செய்திகள் , இரண்டு போன் கால், ஒரு மெயில் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இதில் இருக்கும் காலக்கெடுவும், சாதாரணமான தன்மையும் தான் நமக்குள் சலிப்பாகவும் , மனப் போராட்டமாகவும் மாறி விடுகிறது. சுந்தர ராமசாமியின் இந்த கவிதை அடிக்கடி மனதில் வந்து போகும். கொட்டி மட்டும் தான் தீர்க்க முடியும், அடுத்தந...