வாரத்தில் இரண்டு நாட்கள் காலை 9:30 க்கு மீட்டிங் இருக்கிறது . கொஞ்சம் கிளம்ப தாமதம் ஆனால் சைக்கிளை விரட்ட வேண்டியுள்ளது. சைக்கிளை விரட்டு நம்மை விரட்டுவது தான். டீக்கு நிறுத்தாமல் போவது போன்ற சமரசங்களுடன் சென்று நேரத்தில் சேர்வேன். இது கோடை காலம் ஆதலால், உடுப்பை மாற்றி , கொஞ்சம் மேக்கப் முடித்து தான் உள்ளே செல்ல முடியும். அன்று நான் சென்று கொண்டிருக்கும் போது, முன்னே ஒரு பெரியவர் ஹீரோ ஹோண்டா splendor-ல் போய்க்கொண்டிருந்தார். splendor -ஐ இப்போது vintage என்றே சொல்ல வேண்டும். இவரைப் போல் ஆட்கள் இல்லாவிட்டால் , வண்டிகளுக்கென்று வேறு ம்யூசியம் உண்டா என்று தெரியவில்லை. பின்னால் இருந்து அவர் அணிந்து இருக்கும் கண்ணாடி சட்டம் தெரிந்தது. அரைக்கை சட்டை, அடர் பழுப்பு கால்ச்சட்டை. பாட்டா தோல் செருப்பு, இதுவும் இப்போதெல்லாம் வருவதில்லை. தேடித்தான் வாங்கியிருப்பார். நேராய் நிமிர்ந்து ஒரு தேர்ந்த சாரதி போல் ஒட்டிச் சென்று கொண்டிருந்தார். அவர் பார்வை முழுதும் சாலையிலேயே இருந்தது. நாம் நகரத்தின் மையத்திற்குள் செல்லச் செல்ல சாலையில் பள்ளங்களின் வீரியம் குறைந்த வண்ணம் இருக்கும். வீ...