கீழ் நோக்கி வளர்தல் மாலை இருள் வர ஆரம்பிக்கும் வேளையில் வீட்டிற்குள் இருப்பது ஏனோ எப்போதும் ஒரு சிறு சோர்வை அளிக்கிறது . நேற்றும் அப்படித்தான். ஜன்னல்களின் கண்ணாடிகள் வழியே அடுத்த வீட்டு ட்யூப் லைட்டின் ஒளி கண்ணில் பட ஆரம்பித்திருந்தது . அடுத்த வீட்டு டிவி-கள் தெளிவாய் தெரிய ஆரம்பித்தன . எங்கிருந்தோ கடைசிப் பறவை வானத்தைக் கடந்தது. அதை எதிர்த்து ஒரு பெரிய வௌவால் கூட்டம் அதைப் பார்த்தபடி கடந்து சென்றது .சில தெரு நாய்கள் தூங்க ஆரம்பித்திருந்தன. குழந்தைகள் அடுத்த நாள் தேர்வை எண்ணி படிக்க ஆரம்பித்து இருந்தனர் . ஒருவர் சத்தத்துடன் தெருவெங்கும் கொசுமருந்து அடித்தபடி சென்றார். மேகமே கீழ் இறங்கி வந்தது போல் இருந்தது. சாலையில் வண்டிகளின் விளக்குகள் தெரிய ஆரம்பித்தன. புத்தகம் ஒட வில்லை. எங்காவது வெளியில் சென்று வருவது என்று நீலாவைக் கூட்டி வெளியில் வந்தேன். வேறு எங்கு செலவில்லாமல் செல்ல முடியும்- கோவில்தான். அன்று ஒருவர் கேட்டார், இப்போதெல்லாம் ஏன் கோவில்களில் கூட்டம். இடம் தான் பிரச்சனை. நேற்று 2 மணி நேரம் உட்கார இடம் இல்லாமல் ரோட்டில் நடந்தபடி, நின்றபடி ...